இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்ல கண்ணு, தனது 101-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தி.நகர் பாலன் இல்லத்தில் அவரது பிறந்தநாள் விழா, கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வெளியிடப்பட்ட ஜனசக்தி நூற்றாண்டு சிறப்பு மலர், ஜனசக்தி நாள்காட்டியை, நல்லகண்ணுவின் மூத்த புதல்வி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசிபாரதி பெற்றுக் கொண்டார்.
முன்னதாக நந்தனத்தில் உள்ள வீட்டில் நல்லகண்ணுவை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான நல்லகண்ணு, நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: நூற்றாண்டைக் கடந்து ஞானம், நேர்மை, மனிதநேயம் இந்த மூன்றின் அடையாளமாக, பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழும் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான போராட்டம் என அவர் கண்ட களங்கள் பல. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றைக்கும் போராடி கொண்டிருக்கும் நல்லகண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ்ந்து தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டும்.

