இரணைப்பாலையூடாக மாத்தளன் சிறுகடல்வரையில் வடிகாலமைப்பு தேவை – ரவிகரன் எம்.பி

18 0

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் புதுக்குடியிருப்பு நகர் வெள்ளத்தில் மூழ்குவதால் வர்த்தகர்களும், புதுக்குடியிருப்பு நகரை அண்டியுள்ள பொதுமக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே குறித்த வெள்ள அனர்த்தத்தால் ஏற்படும் நெருக்கடியைத் தடுக்க புதுக்குடியிருப்பு நகரிலிருந்து இரணைப்பாலை வீதியினூடாக, மாத்தளன் சிறுகடல்வரையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் இத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த வடிகாலமைப்புத் தொடர்பில் வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரின் ஆலோசனையினையும் இதன்போது கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு நகரிலிருந்து இரணைப்பாலை ஊடாக மாத்தளன் சிறுகடல் 3.5கிலோமீற்றர் தூரமாகும். எனவே வீதியின் இருபுறமும் வடிகாலமைப்பு மேற்கொள்வதானால் 07கிலோமீற்றர் வடிகாலமைப்புச் செய்யப்படவேண்டியிருக்கும்.

எனவே 07கிலோமீற்றர் வடிகாலமைப்பை மேற்கொள்வதானால் பாரியதொரு நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

அத்தோடு புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல்வரையில் வடிகாலைமைப்பை மேற்கொள்வதற்குரிய திட்ட முன்மொழிவொன்று எம்மால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்ற உறுப்பினரிடம் நாம் சமர்ப்பிக்கவும் தயாராக இருக்கின்றோம் – என்றார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஒவ்வோராண்டும் மழைக்காலங்களில் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது. பாரிய நிதி ஒதுக்கீடு தேவைப்படுகின்றது என்பதற்காக வடிகாலமைப்பை மேற்கொள்ளாமலிருக்க முடியாது. புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல்வரையான வடிகாலமைப்பு வசதியை கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும்.

பாரியநிதி தேவைப்பட்டால் அதனை அரசாங்கத்திடமிருந்து கேட்டுப்பெற்றுக்கொள்வோம். அதற்காகவே மக்கள் எம்மை தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்துள்ளனர். இந்த வடிகாலமைப்புத் திட்டத்தை ஒரே தடவையில் மேற்கொள்ள முடியாவிட்டால் கட்டங்கட்டமாக இந்த வடிகாலமைப்புத் திட்டத்தினை மேற்கொள்ளலாம்.

எனவே புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல்வரையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தீர்மானம் ஒன்றினை முன்மொழிகின்றேன். இந்த தீர்மானம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவிற்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

அந்தவகையில் இந்த வடிகாலமைப்பினை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியையும் பெறுவோம்.

அதன்பிற்பாடு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடனும், முறையான திட்டமுன்மொழிவுடனும் குறித்த வடிகாலமைப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென்ற கோரிக்கையினை உரிய அமைச்சிற்கு அனுப்பிவைப்போம் – என்றார்.