நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞனை கடத்திய நால்வர் கைது

10 0

நேர்முகத் தேர்வொன்றுக்காக அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாகும்புர பகுதிக்கு சென்ற 18 வயதுடைய இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் வேலைக்கான நேர்காணலுக்காக அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொட்டாவ, மாகும்புர பல்நிலை போக்குவரத்து மையத்திற்கு வந்திருந்தார்.

பின்னர், அங்கிருந்து தனது நண்பர் ஒருவர் வசிக்கும் நுகேகொட பகுதிக்குச் செல்வதற்காக, மாகும்புரவிலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் ஏறியுள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​முச்சக்கர வண்டி ஓட்டுநரின் நண்பர் எனக் கூறி  ஒருவர் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார்.

சிறிது தூரம் பயணித்த போது, ​​நண்பர்கள் எனக் கூறி இன்னும் இரண்டு பேர் முச்சக்கர வண்டியில் ஏறி, வாகனத்தில் இருந்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கடத்திச் செல்லும் போது போக்குவரத்து பொலிஸாரின் வீதித் தடையைக் கண்ட இளைஞன் கத்தி அலறியுள்ளார். இந்நிலையில் உடனடியாக செயல்பட்ட பொலிஸார், இளைஞனைக் காப்பாற்றியதாகவும், கடத்தல்காரர்கள் அந்த நேரத்தில் தப்பி ஓடி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் ​தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  ஒரே நாளுக்குள் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.