திருக்கோயில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள்,நண்பர்கள் ஊடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இச்சம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் 2025.12.19 ம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் என்றும் தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் பொலிஸார் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பிலே எது விது கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் ரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் பொலிஸார் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்திருக்கின்ற நிலையிலே பல கேள்வி வலுத்திருக்கிறது.
குறித்த இளைஞரை எந்த அடிப்படையில், எந்த சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்ய பொலிஸார் சென்றார்கள்? ஏன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? அதுவும் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளும் எழும் நிலையில் இந்த விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

