மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில் கடற்படை முகாம்

297 0

மன்னார் – தாழ்வுபாடு மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில்   ஸ்ரீலங்கா கடற்படை  அடாத்தாக முகாம் அமைக்கும்  பணிகளை  முன்னெடுத்துள்ளனர்.

சுமார் அரை கிலோமீற்றர் அகலமும் 1 கிலோ மீற்றர்  நீளமும்  கொண்ட    மீனவர்களின் கரைவலைப்பாட்டு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட  பிரதேசத்தையே இவ்வாறு  ஸ்ரீலங்கா கடற்படை  கையகப்படுத்தி   முகாம் அமைக்கும் பணிகளை  தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா கடற்படையினரின் அந்த செயற்பாடு தொடர்பாக மன்னார் – தாழ்வுபாடு பங்குத்தந்தை சுகுணராஜ் குருசிடம் தாழ்வுபாடு மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

மீனவர்களின் முறைப்பாடு தொடர்பாக தாழ்வுபாடு கடற்படை அதிகாரியிடம் தாழ்வுபாடு பங்குத்தந்தை சுகுணராஜ் குருஸ் தெரிவித்தபோது, தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக  தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறி மீன்பிடிக்கும் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் அந்த பகுதியில் முகாம் அமைக்கவேண்டிய  தேவைப்பாடு உள்ளதாகவும்  கடற்படை  கூறியுள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக்கொண்ட தாழ்வுபாடு கிராமத்தில் 650 மீனவ   குடும்பங்கள் உள்ளனர்.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டும் ஸ்ரீலங்கா அரச படையினர்  யுத்தத்தின் பின்னரும் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் முகாம்களை அமைப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.