இஸ்ரேலுடனான இந்தியாவின் வியூக நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சோக்கை சந்தித்துப் பேசினார். பின்னர், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்காட் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ‘‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தேன். தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மதிப்பளித்தேன். நமது வியூக நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் இந்தியா வர உள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

