இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை ஜன.23 வரை நீட்டித்தது பாகிஸ்தான்

11 0

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களால் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும் விமானங்கள், இந்திய ராணுவ விமானங்கள் உட்பட அனைத்து இந்திய விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இலக்குகளை குறிவைத்துத் தாக்கி அழித்தன.

இதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க ஒரு மாதம் தடை விதித்தது. பிறகு அந்த தடையை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதேபோல், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க இந்தியாவும் தடை விதித்துள்ளது.