சிட்னி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்

8 0

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் ஈடுபட்டனர் என போலீஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானை சேர்ந்த தந்தையும், மகனும் என்பதை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காவல்துறை கண்காணிப்பில் உள்ளார்.

இவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திய காவல்துறை, யூத சமூகத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரே இரவில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் இரண்டு ஐஇடி வெடிகுண்டுகளை காவல்துறை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்தது.

விசாரணையின்போது, 50 வயதுடைய அந்த நபர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர் என்பதையும், அவரது பெயரில் ஆறு துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிந்தோம். அந்த ஆறு துப்பாக்கிகளும் போண்டி கடற்கரையில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த ஆயுதங்கள் எவ்வாறு பெறப்பட்டன, பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்தும்” என்று கூறினார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட தந்தையின் பெயர் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை, ஆனால் அவரது மகன் 24 வயதான நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.