தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2025-தமிழாலயங்கள் யேர்மனி.

125 0

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்க்குமுகத்தின் இளையவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் தமிழ்த்திறன் போட்டி நடாத்தப்பட்டுவருகிறது. இப்போட்டியானது தமிழாலயம், மாநிலம் மற்றும் நாடுதழுவிய மட்டம் என மூன்று நிலைகளில் நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலயங்கள் தமது மாணவர்களிடையே தமிழாலய மட்டத்திலான தெரிவுப் போட்டிகளை நடாத்தித் தெரிவுகளை அணியமாக்கி, தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவுக்கு வழங்குவார்கள். அதனடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான மாநில மட்டத்திலான போட்டியானது 06.12.2025 சனிக்கிழமை கனோவர், கம், நொய்ஸ், கிறீபெல்ட், லண்டவ் மற்றும் கைல்புறோன் ஆகிய நகரங்களில் சிறப்பாக அமைக்கப்பட்ட ஆறு நிலையங்களில் நடைபெற்றது. ஆறு நிலையங்களிலும் நடைபெற்ற போட்டிகள் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்களின் பொறுப்பில் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2025 ஆம் ஆண்டுக்கான மாநிலத் தமிழ்த்திறன் போட்டியானது தமிழீழத் தாயகத்துக்காகத் தம்முயிர் ஈர்ந்தோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றல், அகவணக்கம், தமிழாலயப் பண் ஆகியவற்றோடு 09:30 மணிக்குப் போட்டிகள் தொடங்கின. ஆறு நிலையங்களிலும் 1100க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் 41 போட்டிகளில் பங்கேற்றார்கள். இப்போட்டிகள் தமிழ்த்திறன் பிரிவால் தெரிவுசெய்யப்பட்ட 143 பட்டறிவுமிக்க ஆசிரியப் பெருந்தகைகளும் இளைய ஆசிரியர்களும் இணைந்து கண்ணியத்துடன் நடுவம் செய்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப்பெறும் வெற்றியாளர்கள் 07.03.2026 சனிக்கிழமை நாடுதழுவிய மட்டத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் போட்டியிடவுள்ளனர்.