புதுக்குடியிருப்பில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் பலி

6 0

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர், சிகிச்சை பலனின்றி 12.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், இரணைப்பாலையைச் சேர்ந்த 31 வயதுடைய அன்ரன் செல்வராசா திலைக்சன் என தெரிவிக்கப்படுகிறது.இவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும் செயற்பட்டு வந்த சிறந்த விளையாட்டு வீரர் என தெரிவிக்கப்படுகின்றது.

இரணைப்பாலை வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது அதே வீதியால் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனமும் அதன் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வீதி போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சாரதி 10.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை 13.01.2026 அன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.