மதுரை- வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர்

28 0

மதுரை, மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மதுரை – தொண்டி சாலை (SH 33) மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கியமான மாநில நெடுஞ்சாலையாகும். இச்சாலையானது மதுரை மாநகரிலிருந்து சிவகங்கை செல்வதற்கும் மதுரை வட்டச்சாலையை அணுகுவதற்கும் பயன்படுவதால் மேலமடை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க பல்வேறு இடங்களில் சாலை மேம்பாலம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் 21.1.2022 அன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்.

அதன்படி மதுரை – தொண்டி சாலையில் உள்ள மேலமடை சந்திப்பில் சாலை மேம்பாலம் ஒன்று அமைப்பதற்கும், மிகவும் நெரிசல் மிகுந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் மேலமடை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னலை அப்புறப்படுத்தி அப்பகுதியினை அகலப்படுத்தி வட்ட வடிவ சந்திப்பு அமைப்பதற்கும் 150.28 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளுக்கு 30.10.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், மேலமடை சந்திப்பில் 950 மீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் கட்டப்பட்டு, மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளிலும் ரவுண்டானாவுடன் கூடிய சாலை சந்திப்பு மேம்பாடு செய்யப்பட்டு, பாலத்தின் இருபுறமும் தலா 7.50 மீட்டர் அகலமுள்ள 2 வழித்தடச் சேவைச் சாலைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு முதல் மேம்பாலம் வரை தலா 7.5 மீட்டர் அகலமுள்ள நான்கு வழித்தடச் சாலைகள், மூன்று சாலை சந்திப்புகள் மேம்பாடு, சந்திப்புகளில் சிக்னல் இல்லா பயணம், தடையில்லா இடதுபுறம் திரும்புதல் (Free Left), பேருந்து நிறுத்தத்திற்கு தனி இடவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இச்சாலை சந்திப்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.