சாதிவாரி கணக்கெடுப்பு கோரி டிச.17ல் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்களுக்கு அன்புமணி கடிதம்

26 0

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஆளும் திமுக தவிர்த்து மீதமுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வரும் தங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவையை தாங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனிதர்களின் உடல்நலக் குறைவை சரி செய்ய வேண்டும் என்றால், அதற்கான முதல் நடவடிக்கை நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதே. அதேபோல். சமூகத்தின் நிலையை கண்டறிவதற்கான எக்ஸ்&ரே கருவி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994ஆம் ஆண்டில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 13.07.2010 ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, ‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது.

ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடும். அப்போது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் வாய்ப்புள்ளது. எனவே, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 15%, பட்டியலினம் அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன.

ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இந்த நிலையை மாற்றி, அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்க ஒரே தீர்வு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதற்கு அடிப்படைத் தேவை சாதிவாரி சர்வே நடத்துவது தான்.

2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி (Collection of Statistics Act 2008) சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் தான், அதை பயன்படுத்தி பிஹார், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி சர்வே நடத்தியுள்ளன.

சாதிவாரி சர்வே நடத்தும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பிஹார் மாநிலமும் இதேபோன்ற தீர்ப்பை கடந்த 2023ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது. பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட்டதையும், அதனடிப்படையில் நடத்தப்பட்ட நிகர்நோக்கு நடவடிக்கைகளையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் உண்டு என்ற பிகார் மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது.

சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ததைத் தொடர்ந்து தான் பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி சர்வேயில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிப்பு, வீட்டுவசதி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் அரசுகள் அம்மாநிலங்களில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாகும்.