பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின்விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மலையகத்தில் மண்சரிவு அனர்த்தம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மின்விநியோக கட்டமைப்பு மற்றும் மின்னுற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்துக்கான மின்விநியோக சேவையை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பினையும், சேவையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு தான் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் தேசிய மின்கட்டமைப்பு 540 ஜிகாவாட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது.அம்பாறை, மஹியங்களை மற்றும் வவுனத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மாற்று வழிமுறைகள் ஊடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது செயலிழக்கப்பட்டுள்ளது. மின்விநியோக இணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும்.தற்போது 72 சதவீதமளவில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

