சிகிச்சைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியில்

27 0

பேரிடருக்கு மத்தியில்  நோயாளர்கள், பாதிக்கப்பட்டோருக்கான  சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக  வழங்குவதற்கு  சிரமமாக உள்ளதாகவும், நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் கடும் நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நுவரெலியா வைத்தியசாலை உள்ளிட்ட அம் மாவட்டத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.இது  தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (30)  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர்  மேலும் தெரிவிக்கையில்,

மோசமான காலநிலையின் பின்னர் வானிலை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும்  நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்கிறது.   நேற்று (நேற்று முன்தினம்)   இரவு முதல் களனி ஆற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருகிறது.  பேரிடருக்கு மத்தியில் நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளை வழங்க சிரமமாக உள்ளதுடன், வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செல்படுகின்றன.

கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் கம்பஹா  ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  விசேடமாக  கொழும்பு தேசிய வைத்தியசாலையில்   தொடர்ந்து  சிகிச்சை சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.   பேரிடரின் பின்னர் காயமடைந்தோர், பாதிக்கப்பட்டோர் மற்றும்  தொற்று நோய்களுக்கு ஆளாகியவர்களுக்கு சுகாதார சேவை இன்றியமையாததொன்றாகும்.  உயிர் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளிகளுக்கு   அவசியமான  வசதிகளை  வழங்குவது அவசியம்.

கண்டி, நாவலப்பிட்டி, கம்பஹா, பேராதெனிய, பதுளை, நுவரெலியா, கம்பளை, சிலாபம், மஹியங்கனை, அனுராதபுரம் ஆகிய பல  வைத்தியசாலைகள் நெருக்கடிக்கு  மத்தியில் சேவைகளை வழங்கிவருகின்றன.  குறிப்பாக மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழங்கப்படுவதுடன், அவ்வைத்தியசாலையில் இருந்த  நோயாளர்கள் பிபில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நுவரெலியா வைத்தியசாலை  மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளையும் தொடர்புக் கொள்ள முடியாமல் உள்ளது.

வைத்தியர்கள் முதற்கொண்ட சுகாதார குழு நேற்றைய தினம் நுவரெலியாவின் பின்தங்கிய பகுதிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்துள்ளனர். நோயாளர்கள், வைத்திய ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு அருகிலிருந்த  மக்கள் என சுமார் 500 பேர் வெள்ளம் காரணமாக சிலாபம் வைத்தியசாலையினுள் சிக்கியுள்ளனர்.  அவ்வைத்தியாலையின் சிறுவர் நோயாளர் அறையில் பிள்ளைகள், தாய்மார்கள் என 50 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வில்லை என்றார்