பேரிடருக்குப் பின் பரவும் தொற்றுநோயை கட்டுப்படுத்த; பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளவும்

23 0

பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக்  கட்டுப்படுத்திக் கொள்ள  பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு  இலங்கை  பொது சுகாதார பரிசோதகர்கள்  சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

அவசரகால பேரிடர் மேலாண்மை குறித்து ஞாயிற்றுக்கிழமை (30) பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முழு நாட்டையும் பாதித்துள்ள அசாதாரணமான காலநிலையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மண்சரிவு, வெள்ளப்பெருக்கு என பாரியளவான சேதம் பதிவாகியுள்ளது. அவற்றில் சிக்கி பெருமளவான உயிர்கள் பதிவாகியுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள எம்மக்களை பாதுகாப்பதற்கு  தேவையான அணைத்து துறைகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தல், பாதுகாப்பான உணவுவை வழங்குதல் , அத்தியாவசிய சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,  பாதுகாப்பான குடிநீர் விநியோகம், அவசர சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு , கழிவு மேலாண்மைத் தொடர்பிலும் எமது பங்களிப“பை வழங்கி வருகிறோம். இந்த இக்கட்டான சூழலில்  பாதிக்கப்பட்டோரை தேடிவந்து நிவாரணம்  மற்றும் உதவிகளை வழங்கும் தன்னார்வ தொண்டர்களை ஆதரிப்பதுடன், அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

பேரிடருக்கு பின்னர் தொற்றுநோய், எலிக்காய்ச்சல் என்பன விரைவாகப் பரவுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.  பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்திக் கொள்ள  பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறோம். நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கான சேவையை வழங்க தயாராக உள்ளனர்.