அட்டன் நகரில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் அட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழைய வாடி வீட்டுப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்திலும் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை குறித்த பிரதேசமெங்கும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பலரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அட்டன் நகரில் கழிவுப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதிகளோடு நகரசபையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தியினர் இது வரையில் கழிவுகளை கொட்டுவதற்கு ஒரு இடத்தை தெரிவு செய்யவில்லை. கழிவுகளை கொட்டுவதற்கு இடம் தெரிவு செய்யப்பட்டு அட்டன் நகர கழிவுப் பிரச்சினைகளுக்கு ஒரே மாதத்தில் தீர்வு காணப்படும் என பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மக்களிடம் உறுதியளித்தனர்.
அதன் பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்திலும் இதே உறுதி வழங்கப்பட்டது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வெற்றியீட்டினாலும் அவர்களால் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை.
வெற்றி பெற்ற உறுப்பினர்களில் இருவர் அட்டன் மற்றும் கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கிய விடயம். தற்போது மழை காலமாகையால் குறித்த இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு ஈக்களும் பெருகியுள்ளன. வாடி வீட்டு வளாகத்தை அண்டிய சகல குடியிருப்புகளிலும் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வயோதிபர்கள் , குழந்தைகள் வாழும் இல்லங்களில் இந்த ஈக்களால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நகரசபையின் சுகாதார பரிசோதகர்கள் இது குறித்து அக்கறை எடுக்க வேண்டும் என்றும் குறித்த இடத்தில் கொட்டப்படும் கழிவுகளால் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் குறித்து நகர சபைக்கு தெளிவூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்படுகின்றது.
மேலும் ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இப்பிரதேச மக்கள் ஈக்களை கொல்லும் ஒரு வித ஒட்டும் பசை பூசிய அட்டைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் ஒரு அட்டை 60 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் நாளொன்றுக்கு இரண்டு அட்டைகள் தமக்கு தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு அட்டன் –டிக்கோயா நகர சபை நிர்வாகம் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மெளனம் காத்து வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

