சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும், ஆய்வகங்களையும் பொதுமக்கள் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பார்வையிடலாம். இதற்கு டிச.5-ம் தேதிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓபன் ஹவுஸ்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம், ஐஐடியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் சென்று பார்வையிடலாம்.
கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி வாயிலாக சென்னை மட்டுமின்றி, இதர நகரங்களில் இருந்தும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வருகை தந்து ஐஐடி வளாகத்தை பார்வையிட்டனர்.
இந்நிலையில், ‘ஓபன் ஹவுஸ்’ என்ற திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 2, 3 மற்றும் 4-ம் தேதி ஆகிய 3 நாட்கள் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஆராய்ச்சி திட்டப் பணிகளை எடுத்துரைக்கும் 80-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அரங்குகளையும் பொதுமக்கள் பார்க்கலாம்.
மேலும், 18 கல்வித் துறைகளையும், மாணவர்களின் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளையும் பார்வையிடலாம். புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான நேரடி செயல் விளக்கத்தையும் காணலாம். எனவே, ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் டிச. 5-ம் தேதிக்குள் shaastra.org/open-house. என்ற இணையதள இணைப்பில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும் போது, “அனைவருக்கும் ஐஐடி என்ற உன்னத இலக்குடன் இந்த சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிடுகின்றனர்.
நல்ல வரவேற்பு: இதன் மூலம், ஐஐடியில் சேர வேண்டும், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற உந்துதல் மாணவர்களுக்கு ஏற்படும். இந்நிகழ்ச்சிக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் அதிக எ்ண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வருகை தரும் மாணவர்கள் வரும் காலங்களில் எங்கள் மாணவராக வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றார்.

