சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முறையான கல்வித் தகுதி இல்லாத தூய்மைப் பணியாளர்கள், கொசு மருந்து தெளிப்பவர்கள்பிஎல்ஓக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் படிவங்களை சரிபார்க்க முடியாது. இறந்தவர்களின் வாக்குகளையும், கள்ள வாக்குகளையும் நம்பியே திமுக இருக்கிறது. அதனால்தான் எஸ்ஐஆர்-ஐ செயல்படுத்த விடாமல் திமுக தடுக்கிறது.
எஸ்ஐஆர் பணி தொடர்பாக ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எஸ்ஐஆர் படிவத்தை பதிவேற்றம் செய்யும் சர்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். படிவங்கள் அனைத்தையும் பிஎல்ஓக்கள் தான் வாங்க வேண்டும்.
விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் எஸ்ஐஆர் பணி நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணைய பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.

