இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியாக விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்படும் ‘மௌபிய’ கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தவறான செய்தியை சமூகமயப்படுத்தியுள்ளார்கள். இந்த கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இராணுவ வீரர் ஒருவரின் பெற்றோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் இராணுவத்தால் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததன் பின்னர் மரண சான்றிதழை இராணுவத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது அறிவித்தல் குறித்த பயனாளர்களின் குடும்பத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பெற்றோர் உயிரிழந்ததன் பின்னர் தகவல் வழங்கும் வீதம் மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் அவர் சார்ந்த கொடுப்பனவுகளை பிறிதொருவர் முறையற்ற வகையில் பெற்றுக்கொள்வது அரச நிதி முறைகேடாக கருதப்படும்.
இராணுவத்தினரது பெற்றோருக்கான ‘மௌபிய’ கொடுப்பனவு தொடர்பில் வருடத்தில் இரண்டு முறை தகவல் கோரப்படும். கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர் உயிருடன் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகவல் கோரப்பட்ட போதும் முழுமையான விபரங்கள் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இராணுவ சேவை பிரிவு குறித்த கொடுப்பனவை விடுத்துள்ளது.
இராணுவத்தினரது பெற்றோருக்கான கொடுப்பனவை இடைநிறுத்த எவ்வித தீர்மானத்தையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை. ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினரதும் அவர்களின் குடும்பத்தினரினதும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

