புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் இஸபெல் கத்ரின் மார்டின் திங்கட்கிழமை (24) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத், புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல், இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கனடாவில் வாழும் தரப்பினரின் இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு விரோதமானவையாக இருப்பதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்டின், ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டதொரு அமைப்பாகவே இருக்கின்றது. அதேபோன்று விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சிந்தனைகளையோ கனேடிய மத்திய அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அத்தோடு இலங்கையின் இறையாண்மை மற்றும் கௌவரம் என்பவற்றுக்கு மதிப்பளிப்பதற்கு கனடா உறுதிபூண்டிருக்கின்றது’ எனத் தெரிவித்ததாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் அவரது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

