தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது – ஞானமுத்து ஶ்ரீநேசன்

16 0

பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல்  தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும். தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று  பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர்  அடாவடிகளில் ஈடுபடுகின்றார்.  கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகிறார். இவ்வாறானவர்களின் தலையீடுகள் தொல்லியல் விடயங்களில் இருக்கும் போது இன நல்லிணக்கம்  பாதிக்கப்படும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொல்லியல் இடங்களை அடையாளம் காணும் விடயத்தில் கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அங்கு இப்போது உள்ளூராட்சி சபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி சபைகளின் மேற்பார்வை மற்றும் ஆளுகையில் அந்த காணிகள் இருக்கின்றன. இதன்போது திடீரென அங்கு தொல்லியல் இடங்களுக்கான பதாகைகள் அமைக்கும் போது அங்கு முறுகல் நிலையொன்று ஏற்படுகின்றது.

மட்டக்களப்பில்  இப்போது மிக மோசமான மத குருவொருவர் இருக்கின்றார். அவர் கெட்ட வார்த்தைகளையும் பேசுவார். இனமுறுகல்களை ஏற்படுத்துவார். நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் கூட்டங்களை நடத்தும் போது எமது பிரதேசத்தில் தொல்லியல்  இடங்கள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

ஜனாதிபதி கடந்த வாரம் எங்களை அழைத்து இலங்கை தினத்தை கொண்டாடி நாங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று  குறிப்பிட்டார். அதேவேளை மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைகள், தலைவர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றன. நிலையில் அவர்களுக்கு தெரியாமல் அங்கே தொல்லியல் இடங்களுக்கான அடையாளப்படுத்தல்கள் நடக்கின்றன.அங்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

நாங்கள் சட்டத்தை மீறி செயற்பட விரும்பவில்லை சட்டத்தின் படி நடக்கவே விரும்புகின்றோம். ஆனால் இன நல்லிணக்கத்தை குழப்பக்கூடாது. உள்ளூராட்சி உறுப்பினர்கள், தலைவர்களை அழைத்து அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருக்கலாம்.

கடந்த காலங்களில் சந்தேகத்திற்கிடமான விடயங்கள் நடந்துள்ளன. குருந்தூர் மலைப் பகுதியில் பௌத்த சின்னங்களை போட்டுவிட்டு அங்கு பௌத்த சின்னங்கள் இருந்ததாக  என்று மிகிந்தலையில் உள்ள மதகுருவொருவரே கூறியுள்ளார். இதனால் எமது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுகின்றன.

முதலில் நீங்கள் உள்ளூராட்சி உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடி இந்த நடவடிக்கையை செய்திருக்கலாம். வாகரை கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, மண்முனை மேற்கு போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரோ அகற்றியுள்ளனர்.

இப்போது இலங்கையர் தினத்தை ஐக்கியமாக கொண்டாடவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான நிலைமையில் இதுபோன்ற விடயங்கள் முரண்பாடுகளை ஏற்படுத்தும். நாங்கள் இன நல்லிணக்கத்துடன், ஐக்கியமாக உங்களுடன் கைகோர்த்து பயணிக்க விரும்புகின்றோம். இதனால் இந்த விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் மற்றையவர்கள் அறியத்தக்கதாக இணக்கப்பாட்டுடன் செய்தால் முரண்பாடுகளை தவிர்க்கலாம்.

தொல்லியல் எனும் போது அது இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் இடங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் தொல்லியல் எனும்போது அவை பௌத்த கலாச்சாரத்திற்கான இடம்போன்று காட்டுகின்றனர். அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒருவர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். அவர் கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகின்றார். இவ்வாறானவர்களின் தலையீடுகள் தொல்லியல் விடயங்களில் இருக்கும் போது இன நல்லிணக்கம்  பாதிக்கப்படும்.  இதனால் பொறுப்பு வாய்ந்த அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அவர் பிரச்சினையின்றி தீர்ப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.