திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த நிலப்பரப்பிற்கும் மேலதிகமாக 7,106ஏக்கர் காணிகளைகோருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை வன்னி உட்பட வடக்குக் கிழக்கெங்கும் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின்ஆக்கிரமிப்பால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில்,
பாராளுமன்றில் திங்கட்கிழமை (24.11.2025) பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். குறித்த சபை ஒத்துவைப்புவேளை பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருழத்துத் தெரிவிக்கையில்,
திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் நில அபகரிப்பு நிலைமைகள் தொடர்பில் கௌரவ உறுப்பினர் சண்முகம் குகதாசன் முன்மொழிந்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையினை வரவேற்கின்றேன்.
வன்னிமாவட்டத்திலே நாமும் மிக மோசமாக இந்தத் திணைக்களங்களினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் ஊன்ற வகையில் நானும் சில கருத்துக்களை முன்வைக்கலாமென நினைக்கின்றேன்.
வெருகல் பிரதேசசெயலகப் பிரிவில் 10கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பின் அளவு 32041.66ஏக்கராகும். இந்தப் பிரதேசத்தில் 4809குடும்பங்களைச்சேர்ந்த 16,156மக்கள் வாழ்கின்றனர்.
இவற்றில் 1970.10.09ஆம் திகதிய அல்லை அபயபூமி வர்த்தமானி மற்றும் 424/24ஆம் ஆலக்க 1986.10.24 ஆம் திகதிய திரிகோணமடு வர்த்தமானிமூலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் 25242.13ஏக்கர் காணிகளைத் தமது காணிகளென உரிமை கோருகின்றனர்.
குறிப்பாக பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், கிராம அலுவலர் அலுவலாகம், வைத்தியசாலை, தபால் நிலையம் விளையாட்டு மைதானங்கள் என அனைத்து உட்கட்டமைப்பு வாய்ப்புக்களுடன் கூடிய இந்த வெருகல் பிரதேசத்தைத்தான் இந்த இரண்டு திணைக்களங்களும் அபகரித்து வைத்திருக்கின்றனர்.
வனவளத் திணைக்களமோ 13,906காணிகளை உரிமைகோருவதாக அறிகின்றேன். அந்தவகையில் இருபகுதியினரதும் மொத்த அபகரிப்பானது 39148ஏக்கர், ஆனால் வெருகல் பிரதேசத்தின் மொத்தப்பரப்போ 32041.66ஏக்கராகும். இவ்வாறிருக்க 7,106ஏக்கர் அப்பகுதியில் இல்லாத காணிகளுக்கும் அபகரிப்பாளர்கள் உரிமை உரிமைகோருகின்றனர்.
இவ்வாறுதான் கூகுள் வரைபடத்தினூடாக காணி அபகரிக்கும் திணைக்களத்தினரது செயற்பாடுகள் காணப்படுகின்றன.
இது உங்களுக்கு பிழையாக, அல்லது கேவலமாகத் தெரியவில்லையா? இவ்வாறானவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகள்தானா?
இந்த செயற்பாடுகள் தங்களுடைய ஆட்சியில் புதிதாக இடம்பெறுகின்ற விடயமில்லை. கடந்த ஆட்சிகளின் தொடர் செயற்பாடுகளே இவை இருப்பினும் இவ்வாறான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டவேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்.
இதே அபகரிப்பு நிலைமைகள் வன்னியிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளம் சரணாலயம், நந்திக்கடல் இயற்கைக் காப்பகம், நாயாறு இயற்கைக் காப்பகம், கொக்கிளாய் சரணாலயம் என்ற அடையாளங்களுடன் பாரிய அளவிலான நில ஆக்கிரமிப்பை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதியிலுள்ள தமிழர்களது பூர்வீக விவசாய நிலங்கள் சுண்டிக்குளம் தேசிய பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 131 விவசாயிகளுக்கெதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அண்மையில் மன்னார் சிலாவத்துறைப்பகுதி கடற்பரப்பையும் வனஜீவரசிகள் திணைக்களம் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்கென கோரியிருக்கின்றது.
எனவே தயவுசெய்து சுற்றாடல் அமைச்சர் அவர்களே, இந்த விடயங்களை நீங்கள் கவனத்திற்கொள்ளவேண்டும்.
நீங்கள் இவ்வாறான அபகரிப்புக்களுக்குத் துணையாகச் செயற்படமாட்டீர்களென நம்புகின்றோம். வடக்கு மற்றும் கிழக்குப் மாகாணங்களில் இவ்வாறாக இந்த திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை இந்த அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

