வைத்தியர் சாபி விவகாரத்தை ஊடகங்களே உருவாக்கியது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுவதை முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறேன். ஊடகம் தான் பொய்யான செய்தியை வெளியிட்டது. ஆனால் வைத்தியர் சாபி தொடர்பில் அறிக்கையிடுமாறு ஊடகவியலாளருக்கு தகவல் வழங்கிய கிட்சிறி ஜயலத்தை தென் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராகவும், மஹிந்த திஸாநாயக்கவை பிரதி பொலிஸ்மா அதிபராகவும் ஏன் நியமித்தீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
பொலிஸ் சான்றிதழ் பெறும் போது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும் என்று செய்தி வெளியிட்டதற்காக சிங்கள ஊடகம் ஒன்றின் ஆசிரியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அறிக்கை ஏதும் தேவையில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு குறித்த செய்தி பொய் என்று அதிருப்தி தெரிவித்தார்.
ஏதேனும் போலியான செய்திகள் வெளியாகும் போது அது குறித்து தெளிவுப்படுத்தும் உரிமை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அறிக்கை தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் கொழும்பு மாவட்டத்தில் ஒருசில பொலிஸ் சான்றிதழ் கோரப்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் கடிதம் கேட்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நான் எழுத்து மூலமாக அறிவித்துள்ளேன்.அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன்.
திவயின பத்திரிகை பற்றி பேசிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வைத்தியர் சாபியின் விடயத்தையும் குறிப்பிட்டார். ஆம் வைத்தியர் சாபியின் விடயத்தை ஊடகம் தான் உருவாக்கியது. ஊடகம் தான் போலியான செய்தியை வெளியிட்டது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
வைத்தியர் சாபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் குருநாகல் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் வைத்தியர் சாபி பற்றி அறிக்கையிடுமாறு பொலிஸ் அதிகாரிகளான கிட்சிறி ஜயலத் மற்றும், மஹிந்த திஸாநாயக்க ஊடகவியலாளருக்கு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாங்கம் கிட்சிறி ஜயலத்தை தென் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராகவும், மஹிந்த திஸாநாயக்கவை பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமித்துள்ளது. வைத்தியர் சாபி பற்றி பேசுவதாயின் ஏன் இந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குனீர்கள் என கேள்வியெழுப்பினார்.

