கரூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் அரங்கத்தில் அமமுக மாவட்டச் செயலாளர் பிஎஸ்என்.தங்கவேல் இல்லத் திருமண விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வந்தார். அப்போது, பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து, டிடிவி.தினகரனுக்கு,அண்ணாமலை சால்வை அணிவித்தார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமமுக மாவட்டச் செயலாளரின் உறவினர் என்ற முறையில் அண்ணாமலை வந்துள்ளார். தவெகவுடன் கூட்டணியா என்பது குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்தும் ஜனவரி மாதத்துக்குப் பிறகு தெரியவரும்” என்றார்.
தவெக என்றாலே அலர்ஜி: திருச்சியில் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மெட்ரோ ரயில் குறித்து திமுக, பாஜக மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இபிஎஸ் ஆட்சிக்கு வந்தால்தான் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறுவது கண்டனத்துக்குரியது.
போதைப்பொருள் பழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தவெக என்றாலே திமுகவினருக்கு அலர்ஜிதான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பங்கேற்கும் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி ஆட்சியா? – பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்கட்டமாக ரூ.10,000 கொடுத்தார். அடுத்தகட்ட தொகையை விடுவிக்க உள்ளார். அதேபோல, காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை தருவதாகக் கூறியது. இருதரப்பு அறிவிப்பையும் பார்த்துவிட்டு, ஜனநாயக முறைப்படி பாஜக கூட்டணியை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
பிஹாரில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை அடைந்துள்ளது. அதேபோல, 2026 தேர்தலில் தமிழகத்திலும் காங்கிரஸுக்கு தோல்வியே கிடைக்கும்.
கூட்டணி தர்மத்தின்படி, பிஹாரில் நிதிஷ்குமாரை முதல்வராக்கியுள்ளது பாஜக. நிதிஷ்குமாருக்கு பாஜகவைவிட குறைவான எம்எல்ஏ-க்களே இருந்தாலும், கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளது. அதேபோலத்தான் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் பாஜக நடத்தும். இதுபோல, கூட்டணிக் கட்சிக்கு குறைவான எம்எல்ஏ-க்கள் இருந்தால்,அந்தக் கட்சியை சேர்ந்தவரை காங்கிரஸ் முதல்வராக்குமா?
பிரதமர் மோடியின் செல்வாக்கு, நல்ல அரசு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் மனநிலை, காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் பிஹாரைப்போல தமிழகத்திலும் நிலவுகிறது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

