அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் அவருக்கு 2026 தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைய விதிப்படி, ஆண்டுக்கொரு முறை அரசியல் கட்சிகள் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். இதன்படிஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு,பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.
கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பழனிசாமிக்கு வழங்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.
மேலும், திமுக அரசின் அவலங்களாக ஏற்கெனவே பழனிசாமி பட்டியலிட்டது போன்று நெல் கொள்முதல் குளறுபடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாது காப்பின்மை, போதைப்பொருள் புழக்கம், தொடர் கொலைகள் உள்ளிட்டவை குறித்து திமுக அரசுக்கு எதிராக நீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மத்திய அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும், இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக கிளை நிர்வாகிகள், ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், அதில் ஆளுங்கட்சியின் தலையீடு குறித்து அதிமுகவினர் விழிப்புடன் இருப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

