நில்வலா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: தாழ் நிலப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

19 0

தொடரும் கனமழை காரணமாக நில்வலா மற்றும் கிங் (Gin) கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்க கூடுமென வளியமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேநேரம் நாட்டின் ஏயைன பகுதிகளில் சனிக்கிழமை (22) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீனவர்களுக்கு விசெட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு அந்தமான் கடலில் இன்றுசனிக்கிழமை (22) குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது மேல் – வடமேல் நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 24 ஆம் திகதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, காற்றானது காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரையோரக் கடற்பிராந்தியங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியங்களில் சில நேரங்களில் மிதமானதாக காற்று வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மிதமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், நில்வலா கங்கையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

எனவே, எதிர்வரும் 24 மணித்தியாலத்தில், பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரெஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய மற்றும் திஹகொட டிஃஎஸ் பிரிவுகளில் அமைந்துள்ள நில்வலா நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பகுதியில் வசிப்பவர்கள் இதுகுறித்து அதிக கவனம் செலுத்துமாறும், அந்த பகுதிகள் வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, பலத்த மழை காரணமாக ஜின் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த 14 மணித்தியாலத்திற்குள் நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள ஜின் கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பகுதிகளில் பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இது குறித்து அதிககவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், இது தொடர்பாக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.