கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

22 0

பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ‘சூம்’ (Zoom) தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

வேறு சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் பிரதீப் குமார என்ற சந்தேக நபரை இந்த வழக்கில் 35ஆவது சந்தேக நபராக பெயரிட அனுமதி வழங்குமாறு குறித்த அதிகாரி நீதிமன்றில் கோரினார்.

இதற்கு அனுமதி வழங்கிய நீதவான், அடுத்த தவணையின் போது குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

விளக்கமறியலில் உள்ள மற்றுமொரு சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறும் அவர் நீதிமன்றில் கோரிய நிலையில், அதற்கும் நீதவான் அனுமதி வழங்கினார்.