எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன, மதவாதத்தை தூக்கிச் சுமப்பவர்களாகவே உள்ளனர் – குகதாசன்

18 0

இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்துவரும் திருகோணமலை வாழ். சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன, மதவாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் அகச் சூழலால் மாற்றப்படாதவர்களாகவும் உண்மையில் இன, மதவாதத்தினை தூக்கி சுமப்பவராகவும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்ற அமர்வில் இன்று (21) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நான் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் இப்பொழுது திருகோணமலை மாநகரில் எழுந்துள்ள சிக்கல்  பற்றி ஒரு தெளிவையும் அதன்  உண்மைத் தன்மையையும் இந்த மேலான அவைக்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

திருகோணமலை மாநகர  மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையை முகவரியாகக் கொண்டு 1957ஆம் ஆண்டில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய என்னும்  அறக்கட்டளை பதியப்பட்டுள்ளது.

இது  2003ஆம் ஆண்டில் ஒரு தர்ம பள்ளி நடத்தும் நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. அத்தோடு இது 2010ஆம் ஆண்டில் ஒரு புத்த  விகாரையாகவும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வேளையில்  இது  1951ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடம் இப்பொழுது சங்கமித்தை விகாரை என்றும் அழைக்கப் படுகின்றது. இது முதலாவது இடமாகும்.

இது இவ்வாறிருக்க, டொக்யாட் வீதியில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையில் மேற்படி ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய அமைப்பின் விண்ணப்பத்தின் பேரில் 40  பேர்ச் பரப்பளவு  உள்ள வேறு ஒரு காணி அன்றைய குடியரசுத் தலைவரான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்களால் 2008ஆம் ஆண்டு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த  காணிக்கு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் குடியரசுத் தலைவரான மாண்புமிகு மகிந்த இராஜபக்ஷ அவர்களால் நீண்ட கால குத்தகையை  மாற்றி உறுதி வழங்கப் பட்டுள்ளது. இது இரண்டாவது இடமாகும்.

மேற்படி இந்த இரண்டு இடங்களும் வெவ்வேறானவை. இப்பொழுது இவை இரண்டும் ஒன்று எனக் குழப்பப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு குத்தகைக்கு பெற்ற காணியில், எவ்வாறு 2003ஆம் ஆண்டு தர்ம பள்ளி பதியப்பட்டு நடத்தி வர முடியும் என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தக் காணியை 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐந்தாம் நாள் அளவீடு செய்த நில அளவைத் திணைக்களமானது குறிப்பிட்ட காணி கடலோர ஒதுக்குப் பகுதி என்றும் இது எதுவித கட்டடமும் அமைக்கப்பட முடியாத வலயம் என்றும் குறிப்பிடுகிறது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அதனுள் கட்டடம் அமைக்கலாம் என்ற கேள்வி எழுகின்றது.

மேலும், நில அளவைத் திணைக்களம் தனது குறிப்பில் இக்காணிக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கமும் கடற்கரை என்றும் மேற்கில் கோட்டைக்குச் செல்லும் வீதி என்றும் சவுக்கு மரம் அமைந்துள்ள தோட்டம்  என்றும் குறிப்பிட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் 2004ஆம் ஆண்டின் சுனாமிக்கு பிந்திய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய இரண்டாவதாக குறிப்பிட்ட அந்த இடத்தில் எந்தக் கட்டடத்தையும் கட்ட முடியாது.

அதாவது கடற்கரை ஓரத்தில் இருந்து 20 மீற்றருக்குள் எந்த கட்டடத்தையும் கட்ட, சட்ட அனுமதி இல்லை என்பதனைக் கரையோர பாதுகாப்புச் சட்டம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இருப்பினும் தற்போதைய இந்த கட்டடத்தை அதாவது தர்ம பள்ளியை கரையோரத்தில் இருந்து 10 மீற்றர் தூரத்திற்குள்  அமைக்க முனைவது  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இந்த இடத்தில் ஒரு  தர்மப் பள்ளி கட்டப்பட்டு நடத்தப்படும் பொழுது மீண்டும் ஒரு சுனாமிப் பேரலை ஏற்பட்டால் மாணவர்களின் நிலை என்ன என்பதனையும் நாம் அறிவியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தகைய பேரிடர்  மீண்டும் ஏற்பட்டு மனித  உயிர்கள் காவு கொள்ளப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த இடத்தில் எவ்வித கட்டடமும் கட்டுவது பொருத்தமானது அல்ல என்பதனைத் தெரிவித்துக்கொண்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசும் நீதித்துறையும் ஆவன செய்யவேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

“மதம் என்பது அபினைப்  போன்றது” என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறினார்.

இந்த நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் சிலரின் செயற்பாடுகளில் இருந்து இது உண்மை என்பதனை என்னால் அறிந்துகொள்ள முடிகின்றது.  மேலும் கார்ல்ஸ் மார்க்ஸ் ஒரு மனிதனுக்கு அகச்சூழல், புறச்சூழல் என்று இரண்டு காணப்படுகின்றது எனவும் சில மனிதர்கள் புறச்சூழலால் மாறி இருப்பவர் போல தோன்றினாலும்  அகச் சூழலால் மாறி இருக்க மாட்டார்கள் என்றார். அதுவும்  உண்மை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள்  எடுத்துக்காட்டுகின்றன. அதாவது இவர்கள் இன, மதவாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் அகச் சூழலால் மாற்றப்படாதவர்கள் ஆகவும் உண்மையில் இன, மதவாதத்தினை தூக்கி சுமப்பவராகவும் உள்ளனர்.

இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர். இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.