தேயிலை தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒலி கண்காணிப்பு ஆய்வின் மூலம் இரண்டு அரியவகை வௌவால் இனங்களை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, Wroughton’s free-tailed bat (Otomops wroughtoni) மற்றும் East Asian free-tailed bat (Tadarida insignis) ஆகிய இரண்டு வௌவால் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக வௌவால்கள் இரவில் மட்டுமே உயரமாக பறந்து திரிவதால் அவற்றைப் பார்வை இடுவது கடினம்.
ஆனால் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான ஒலி இருப்பதால், அந்த ஒலியை பதிவு செய்து ஆய்வு செய்வதன் மூலம் அவற்றைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது.
இந்த ஆய்வில் கிடைத்த ஒலி பதிவுகள், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட பிற வௌவால் இனங்களிலிருந்து இந்த இரண்டு புதிய இனங்கள் வேறுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை இலங்கையின் வௌவால் பல்வகைமை தன்மை பற்றி புதிய தகவல்களைத் தந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் O. wroughtoni இனத்தின் பரவல் 70 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
T. insignis மிகவும் உயரமான பகுதிகளில் கண்டறியப்பட்டதால், அதன் சூழலியல் குறித்து புதிதான புரிதல்கள் கிடைத்துள்ளன.
அத்தடன், தேயிலைத் தோட்டங்களும் வனவிலங்குகளுக்கான முக்கிய வாழிடமாக இருக்க முடியும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
இந்த இரண்டு புதிய இனங்களுடன், இலங்கையின் வௌவால் இன எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் உயிர்ப்பல்வகைமையை மேலும் நன்றாக அறிந்து கொள்ள மேலும் பல இடங்களில் ஒலி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துக்கின்றனர்.
ஆய்வு குழுவில் ருஹூணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சிக்காகோ Field Museum ஆய்வாளர்கள் — தாரக்க குசுமிந்த, சாமர அமரசிங்க, அமனி மன்னக்கார, புரூஸ் டி. பேட்டர்சன், விபுல பி. யாபா — இணைந்து பணியாற்றியுள்ளனர்.

