புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீர் விலகல்!

27 0

புதுச்சேரி அதிமுக மாநில செயலரின் சகோதரரான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீரென்று இன்று விலகியுள்ளார்.

புதுவை மாநில அதிமுகவில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். இவர் 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அதிமுக செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.