ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேற்று (18) சந்தித்து உரையாடினார்.
அவ்வேளை, மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான பார்வைகள் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:
“மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொண்டேன். இந்தியா – ரஷ்யா வருடாந்த உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றியும் அவரிடம் எடுத்துக் கூறினேன். மண்டல மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றியும் ஆலோசனை செய்தோம். இரு நாடுகளின் உறவுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கான அவருடைய பார்வைகளை மற்றும் வழிகாட்டுதல்களை ஆழ்ந்து மதிக்கிறேன்” என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு திங்கட்கிழமை (17), செவ்வாய்க்கிழமை (18) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அதன் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை வகித்த ஜெய்சங்கர், அவ்வேளை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசினார்.
இந்தியா – ரஷ்யா வர்த்தக விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் சந்தர்ப்பத்தில், ரஷ்ய ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த சந்திப்பு ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

