சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் பகுதியின் அருகில் உள்ள ஜன்னல் ஊடாகப் பாம்பு உள்ளே நுழைய முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் அதனைக் கண்டுள்ளனர்.
சபாநாயகரின் அலுவலக அறைக்குள் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்றத்தின் தோட்டப் பராமரிப்புப் பிரிவின் அதிகாரி விரைந்து செயற்பட்டு, பாம்பை உடனடியாக அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக அகற்றினார் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற வளாகத்திற்குள் பல்வேறு வகையான பாம்புகள் அவ்வப்போது நுழைவது சிலகாலமாக நடந்து வருகிறது.
இவை பெரும்பாலும் பாராளுமன்றக் கட்டடத்தை ஒட்டியுள்ள தியவன்ன ஓயா (Diyawanna Oya) பகுதியிலிருந்து வருகின்றன.
தோட்டப் பராமரிப்புப் பிரிவின் கூற்றுப்படி, அண்மைக் காலங்களில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாராளுமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.

