தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது

33 0

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில் ஒருவர் கூட விவாதத்துக்கு தயாரில்லை. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி நாங்கள் குறிப்பிட்ட விடயத்தை அரசாங்கம் இனவாத முரண்பாடாக மாற்றியமைத்துள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பில் சட்ட ரீதியிலான சிக்கல் காணப்பட்டது. இதனை தெளிவுப்படுத்தவே பாராளுமன்றத்திலும்,  வெளியிடங்களிலும் கேள்வியெழுப்பினோம். ஆனால் அரசாங்கம் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். எவராவது உள்ளீர்கள். அவ்வாறு இருந்தால். வாருங்கள். வெளிவிவகார அமைச்சரே நீங்கள் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்தீர்கள். நீங்களாவது பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்.

பகிரங்க விவாதத்துக்கு வருவதற்கு எவரும் தயாரில்லையா, 159 பேர் உள்ளீர்கள் தைரியமாக வாருங்கள். பத்தரமுல்லை காரியாலயத்தின் அனுமதி இல்லாமல் ஆளும் தரப்பால் ஏதும் செய்ய முடியாது.பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயார். மக்களுக்கு உண்மையை குறிப்பிடுங்கள்.

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது.தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை திருத்திற் கொள்ளாமல் இதற்கு இனவாத உருவமளித்து மக்களை தவறாக வழிநடத்துகிறது. முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என்றார்.