வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 80 மேலதிக வாக்குகளினால் நிதி ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு,வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிக்க வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் இந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் 80 மேலதிக வாக்குகளினால் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்களுக்கான நீதி ஒதுக்கீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதில் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக அரசு தரப்பினரும் எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் வாக்களித்த நிலையில் பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

