ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை: சட்டமா அதிபர் அனுமதியின்றி லண்டன் சென்ற CID அதிகாரிகள் குறித்து கேள்வி

25 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் அனுமதி பெறாமல்  லண்டன் சென்றுள்ளார்கள். இலங்கை பாதுகாப்பு தரப்பு தகவல் கோரினால் லண்டன் பல்கலைக்கழகம் தகவல் வழங்குமா?  இராஜதந்திர மட்டத்தில் செயற்படும் முறைமை அரசாங்கத்துக்கு தெரியாதா? என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன  கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாறாக  கத்தோலிக்க மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஹோர்டன் பிளேஸ்இ நுவரெலியா ஆகிய சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லும் தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மலசலகூட வசதிகள் கூட கிடையாது.

இவ்வாறான நிலையில் எவ்வாறு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்.  தன்பாலினத்தவர்களை ஊக்குவித்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது நாட்டுக்கு முற்றிலும் எதிரானது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் அனுமதி பெறாமல்  லண்டன் சென்றுள்ளார்கள்.  பிரித்தானியாவின் பொலிஸார் இலங்கைக்கு வந்து களனி பல்கலைக்கழகத்தில் தகவல் கோரினால் அந்த பல்கலைக்கழகம் வழங்குமா?

இலங்கையின் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் கோரினால் லண்டன் பல்கலைக்கழகம்  தகவல் வழங்குமா? இராஜதந்திர மட்டத்தில் செயற்படும் முறைமை அரசாங்கத்துக்கு தெரியாதா? இந்த பிரச்சினையை இராஜதந்திர மட்டத்திலேயே கையாள வேண்டும் என்றார்.