பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் டீல் வைத்துள்ளது.பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாப நட்டத்தை கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்ச பலனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்ட கருத்தை அரசாங்கம் திரிபுப்படுத்தி விட்டது.
கடந்த அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குவதாக குறிப்பிட்டது.வர்த்தமானி அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டது.மக்களும் கொண்டாடினார்கள்.ஆனால் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
200 ரூபா சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் விடுத்த அறிவிப்பு முறையற்றது. சட்ட வழிமுறைகளுக்கு அமைய இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டதை அரசாங்கம் தனது அரசியல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டது.
எமது கட்சியில் கருத்து
சுதந்திரம் பதிவேற்றப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியை போன்று இதைத் தான் குறிப்பிட வேண்டும் என்று எவ்வித வரையறைகளும் விதிக்கப்படவில்லை.
தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் டீல் வைத்து ள்ளார்கள்.கம்பனிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்காகவே செயற்பட்டன.தோட்ட உரிமையாளர்கள் ஜனாதிபதியை ” மச்சான் ” என்று அழைத்துப் பேசுகிறார்கள்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் வருடாந்தம் இலாபமடைகின்றன.இந்த நிறுவனங்களின் இலாப, நட்டக் கணக்கு கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்ச பலனை அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் முதலாளி வர்க்கத்துக்கு சாதகமாக உள்ளது. நடுத்தர மக்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஏதும் இல்லை.மக்கள் அடுத்தாண்டு பல விடயங்களை தெரிந்துக் கொள்வார்கள் என்றார்.

