நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த அறிவினையும் வழங்கும் பயிற்சியான “ஜனனி” வேலைத்திட்டம் நுவரெலியாவில் நேற்று (16) சனிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரமானதுமான நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் போது பெண்கள் எவ்வாறு ஊடக நெறிமுறையில் வித்தியசமான அணுகுமுறைகளைக் கையாளுதல், நெறிமுறையைப் பின்பற்றுவதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், ஐரஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, நுவரெலியா மாவட்ட கஃபே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகில்ராஜ் மற்றும் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த “ஜனனி” வேலைத் திட்டம் முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டமாக 10 மாவட்டங்களுக்கான வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் மூன்று அமர்வுகளாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

