டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறார் டில்வின்

21 0

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது டெல்லியில் உயர்மட்ட அரசியல் சந்திப்புகளில் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழு பங்கேற்கவுள்ளது. இலங்கை அரசியலிலும், பிராந்திய இராஜதந்திரத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா விஜயத்தை பார்க்கப்படுகிறது.

ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியதில் டில்வின் சில்வா முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் பிராந்தியத் தலையீட்டை அன்றும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அதன் பொதுச் செயலாளரை இந்தியாவுக்கு அனுப்புவது, கட்சியின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பாரிய இராஜதந்திர மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது.

அவர் இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் செல்கிறார். இந்த விஜயம் ஜே.வி.பி.யானது பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. ஜனாதிபதி சீனாவிற்குப் பயணம் செய்து ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது அனைவரும் அறிந்ததே. ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வாவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்குப் பிறகு சீனாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயங்களின் போது  ஜே.வி.பி.யின் தலைவர்கள் சீனாவுடன் முதலீட்டு உறவுகளை மேலும் வலுவாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்களை எடுத்தததாக செய்திகள் வெளியாகின.

சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தியதன் பின்னணியில், இந்திய விஜயம் என்பது, இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்த விரும்பும் ஒரு கட்சி, பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர சமநிலையை நிலைநாட்ட முற்படுவதைக் காட்டுகிறது. ஒரு நாடு சார்ந்து சாய்ந்துவிடாமல், இரு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற அல்லது அவர்களின் கவலைகளைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இது அமைகிறது. இந்தச் சூழ்நிலையில், டில்வின் சில்வாவின் டெல்லி விஜயம், ஜே.வி.பி.யின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக பிரதிப்பலிக்கிறது. உயர் மட்ட அரசியல் சந்திப்புகளில் அவர் பங்கேற்பது, எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளைப் பேணுவதில் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும்.

மறுபுறம் இந்தியாவுடனான கடந்தகால முரண்பாடுகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் தொடர்பில், இந்தியத் தலைமைக்கு நேரடியாக இராஜதந்திர விளக்கமளித்து, புதிய உறவுப் பாதையைத் தொடங்குவதற்கு இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கலாம். டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் என்பது ஜே.வி.பி.யின் இராஜதந்திரக் கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தையும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிராந்திய வல்லரசுகளுடன் முரண்படாமல் சமநிலை உறவைப் பேணுவதற்கான விருப்பத்தையும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.