யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

27 0

யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட  வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது.