ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில், கட்சியின் சிரேஷ்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் அதன் தலைமையைப் பலப்படுத்துவதற்கும், அடிமட்ட அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குமான ஐ.தே.கவின் பரந்த மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகவே அவரது நியமனம் அமைந்துள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அதற்கமைய டிசம்பரிலிருந்து ஹரின் பெர்னாண்டோ தனக்குரித்தாக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளார்.

