நுவரெலியாவில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

26 0

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வகைகளை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தியும், விலை வீழ்ச்சியை எதிர்த்தும் நுவரெலியாவில் தேங்காய்களை அடித்துடைத்து, அரசுக்கு எதிராக நுவரெலியா விசேட பொருளாதார நிலையத்தினை மூடி திங்கட்கிழமை (10) போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது வெளியில் தோட்டங்களுக்குச் சென்று மரக்கறி கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டு விவசாயிகள், முதலாளிமார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதியை உடனடியாக நிறுத்த கோரியும் விவசாயிகள் எதிர்நோக்கும் ஏராளமான பிரச்சினைகள் அடங்கிய பல்வேறு பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக நுவரெலியா பிரதான நகரை வலம் வந்து இறுதியில் நுவரெலியா – உடப்புசல்லாவ வீதியில் உள்ள விசேட பொருளாதார நிலையம் வரை சென்று போராட்டத்தை நிறைவு செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், வெளிநாட்டு உருளைக்கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து  விற்பனை செய்கின்றனர். இதன் விளைவு பற்றித் தெரியாத நுகர்வோர் அதனை கொள்வனவு செய்து உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நுவரெலியாவில் விவசாயிகள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து உருளைக்கிழங்கை உற்பத்தி செய்தாலும் அதன் விற்பனை விலை ஒரு கிலோ கிராம் 200 ரூபாய் தொடக்கம் 250 ரூபாய்க்கு மாத்திரம் விற்பனை செய்ய முடிகின்றது.

ஆனால் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ஒரு விவசாயி ஆரம்பம் முதல் இறுதி வரை பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் செலவு செய்யப்படுகின்றது. இவ்வாறு செலவு செய்தே உரிய விலை இல்லாமல் நாங்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

வெளிநாட்டு உருளைக்கிழங்குகள் இலங்கைக்கு இறக்குமதி செய்து, நாட்டுக்கு கொண்டுவரப்படும்போது அந்த கிழங்குகள் முளைப்பதற்கு தயாராக உள்ளது. போதிய அளவு சூரிய ஒளி இன்மையால் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உருளைக்கிழங்கு பல்வேறு நிறங்களாக மாறுகின்றன.

அத்துடன் வெளிநாட்டு உருளைக்கிழங்குகள், பூச்சிகளால் சேதப்படுத்தப்பட்டு நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டே அது இலங்கைக்கு வருகிறது. இதன் காரணமாகவே  அவற்றை 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே, பொது மக்கள் விலை குறைவு என்ற காரணத்தால் அதிகமாக வெளிநாட்டு உருளைக்கிழங்குகளையே கொள்வனவு செய்கின்றனர். இதன் காரணமாக நுவரெலியா உருளைக்கிழங்கு விற்பனை குறைந்து விலையும் குறைந்து வருகிறது.

எனவே இந்த விடயத்தில்  ஜனாதிபதி தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அரசாங்கம் உரிய கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் வந்து போராடுவதற்கும் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் நுவரெலியா, கந்தபளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.