தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், தவெக- திமுக இடையில்தான் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி எனத் தொடர்ந்து பேசி வருகிறார். கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு விஜய் மவுனம் காத்து வந்தார்.
அப்போது, அதிமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக தி.மு.க. அரசை விமர்சித்து வந்தனர்.அப்போது விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் பேசும்போது, தவெக- திமுக இடையில்தான் போட்டி என உறுதிப்பட தெரிவித்தார்.இதனால் அதிமுக கூட்டணிக்கு விஜயை இழுக்க முடியாது என அதிமுக உயர்மட்ட தலைவர்கள் நினைத்துவிட்டனர்.
இதனால் தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த கட்சியின் சீனியர் தலைவர் கே.பி. முனுசாமி, “சினிமாவில் நடித்த புகழை வைத்துக் கொண்டு தங்களை முதன்மைபடுத்துகின்றனர் ” எனத் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மற்றொரு தலைவர் நத்தம் விஸ்வநாதன், “மக்களை சந்திப்பதில்லை. மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. விஜய் இன்னும் பயிற்சி பெற வேண்டும். 10 படங்கள் ஓடினாலே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எண்ணுகின்றனர் ” என்றார்.

