டெல்லி விமான நிலையத்தில் 800+ விமான சேவை திடீர் பாதிப்பு: என்ன காரணம்?

33 0

இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 800-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தக் கோளாறு காரணமாகப் பயணிகள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர். இதனால் பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கும் வசதி, உணவு வசதிகளை விமானநிலையம் ஏற்பாடு செய்தது.

இந்த விமான நிலையத்துக்கு தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தரவுகளை நிர்வகிக்கும் முக்கியமான தானியங்கி செய்தி மாற்று அமைப்பு (AMSS) செயலிழந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு பிரச்சினை இதற்கு முன் எப்போதும் நடந்தது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக விமானங்களின் திட்டமிடல், வழித்தட அனுமதி, வானிலை தகவல்கள் உள்ளிட்ட முக்கியச் செயல்பாட்டுச் செய்திகளை இந்த ஏஎம்எஸ்எஸ் அமைப்பு தானாகவே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு வழங்கும்.

இந்தத் தானியங்கி அமைப்பு செயலிழந்ததால், அதிகாரிகள் அனைத்து விமானத் திட்டங்களையும் தாங்களே கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காலதாமத்ததால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சினை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதுடன், 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்களின் சேவைகளும் இதில் அடக்கம். டெல்லியில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்ப சிக்கலின் விளைவாக, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற பிற மாநில விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

உடனடியாக பிரச்சினையை கண்டறிந்த தொழில்நுட்ப குழுக்கள் துரிதமாகச் செயல்பட்டு, ஏஎம்எஸ்எஸ் அமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, ஏஎம்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, செயல்படத் தொடங்கிவிட்டதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

எனினும், தரவுகளில் ஏற்பட்ட தேக்கம் காரணமாகத் தானியங்கிச் செயல்பாடுகளில் சிறு தாமதங்கள் தொடரக்கூடும் என்றும், விரைவில் முழுமையான இயல்புநிலை திரும்பும் என்றும் ஆணையம் உறுதி அளித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக இந்திய விமான நிலைய ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களும் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.