மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று (04) மாலை கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை ட்ரோன் காட்சி மூலம் அவதானித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் செந்தில்குமார் உட்பட அவர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இராணுவத்தினரும் இணைந்து யானைகளைத் துரத்தும் பணியை உடனடியாகத் தொடங்கினர்.
இரவு நேரத்திலும் இப்பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
பா.உ. இரா. சாணக்கியன் களத்தில் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். “யானைகளை வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பி, மக்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்” என அவர் உறுதியளித்தார்.
இப்பகுதியில் யானைத் தடுப்பு வேலி அமைப்பது, ஒலி வெடிகள் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

