வாக்காளர் பட்டியல் தவறுதலாக வந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை ஆளும் கட்சியான திமுகவுக்கு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிஹாரில் இப்பணியை மேற்கொள்ளும் போது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி நேர்மையாக நடைபெற வேண்டும். அதேசமயம், டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல கோடி வாக்காளர்களின் அனைத்து தரவுகளையும் சரிபார்த்து எப்படி இந்த பட்டியல் தயாரிக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கிராமங்களில் மக்கள் காலையிலேயே பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள். அப்படி இருக்கும் போது ஒரு மாத காலத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை எப்படி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், சந்தித்து அவர்கள் வழங்கும் படிவங்களை பூர்த்திசெய்து கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
படிவங்களை பூர்த்தி செய்யும்போது, அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என கூறுகின்றனர். படிவம் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதி வாக்காளர்களை சேர்ப்பதே கடினமாகிவிடும். நல்ல நோக்கத்துக்காக எடுத்த முயற்சியின் போது தவறு நடந்தால் பல வாக்காளர்கள் விடுபட்டுப் போவார்கள். இதனால் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். ஆகவே, தேர்தல் ஆணையம் இதைக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
குறைந்தது 2 மாத கால அவகாசம் கொடுத்து அனைத்து குக்கிராமங்களிலும் முகாம் நடத்த வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களால் இப்பணிகளை செய்ய முடியாது. அதனால் மத்திய – மாநில அரசு ஊழியர்களை இதில் பயன்படுத்தினால் தான் குறைந்தபட்சம் 90 முதல் 95 சதவீதம் வரை துல்லியமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும்.
திமுக தொடங்கப்பட்டு 76 ஆண்டுகளாகிறது. தமிழ்நாட்டில் திமுக தான் ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் ஆட்சி இயந்திரமும் கட்சி இயந்திரமும் இப்போது உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் தவறுதலாக வந்துவிடாமல் தடுக்க வேண்டிய ஜனநாயகக் கடமை திமுக-வுக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

