ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்த மனோஜ் பாண்டியன், திமுகவில் சேர முடிவு செய்தார். இதையடுத்து நேற்று சென்னை அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திராவிடக் கொள்கைகள், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். என்னுடைய எஞ்சிய வாழ்க்கையிலும் இந்த திராவிட கொள்கையைப் பாதுகாக்கும் இயக்கத்தில் பணியாற்ற வந்துள்ளேன். தொண்டர்களின் உழைப்பை அங்கீகரிக்காதவர் பழனிசாமி.பாஜக வுடன் தற்போது எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. எந்தக் கொள்கைக்காக அதிமுக உருவாக்கப்பட்டதோ, அது காற்றில் விடப்பட்டுள்ளது. அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, எந்தச் சூழலிலும் கட்சியை அடகு வைக்க வில்லை.
பாஜகவின் கிளையாக அதிமுக செயல்படுகிறது. இவ்வாறு கூறினார். இதற்கிடையே பி.எச்.மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு அதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மனோஜ் பாண்டியன் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் மீது எனக்கு மரியாதை உண்டு. தொலைபேசியில் எனது முடிவை அவரிடம் சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஆலங்குளத்தில் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

