அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை

48 0

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜனவீர  தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் அனைத்து கொள்கைத் திட்டங்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. கடந்த அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டதோ அதே வகையில் தான் இந்த அரசாங்கமும் செயற்படுகிறது.

பெற்றுக் கொண்ட அரசமுறை கடன்களை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இந்த அரசாங்கமும் கடன் பெறுவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லை.எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த பேரணியில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகளிடம் உறுதியான கொள்கை கிடையாது என்றார்.