போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்

43 0

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நேற்று (1) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நாட்டின் மேற்குப் பகுதியில் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் இந்த நெடுநாள் மீன்பிடிப் படகை கைப்பற்றினர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த மீன்பிடிப் படகின் உரிமையாளர் நேற்று மாலை காலி பிரதேசத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.

குறித்த மீன்பிடிப் படகு இன்று ( 2) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது, 16 உரைகளில் இருந்த சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகை கைப்பற்றும் போது அதில் இருந்த 6 சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.