ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு….!

43 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகமானது உள்ளகக் கணக்காய்வு, விசாரணை, மேற்பார்வை மற்றும் சேவை மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊழியர்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.

அதன்படி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வெளியகப்பொறிமுறை குறித்து இலங்கைப் பிரஜைகள் மூவருடன் இணைந்து அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளுக்கு அப்பால் இலங்கையின் ஒப்புதல் இன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமையானது அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு என்பன பற்றிய கேள்வியைத் தோற்றுவிப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படுவதன் காரணமாக, அதன் இரகசியத்தன்மையைக் காரணங்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.