அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் பாமக (ராமதாஸ்) மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது: பாமக தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது. தமிழகம் முழுவதும் நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கூட்டணி இல்லாமல் தேர்தல் இல்லை. வெற்றி பெறும் கட்சியுடன் நிச்சயம் கூட்டணி வைப்போம். ஆனால், யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் முடிவு செய்வார். பாமகவில் பிளவு கிடையாது.
சிலர் அவசரப்பட்டு போயிருக்கலாம். அதைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. பாமக செயற்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தோம். ஆனால், இங்குள்ள டிஎஸ்பி அனுமதி அளிக்காததுடன், கட்சியினரை ஒருமையில் பேசியுள்ளார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவி சக்கரவர்த்தியை கண்டித்து
பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
அண்ணா, கருணாநிதிபோல.. வாக்காளர் பட்டியலை திருத்துவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையாக இருக்க வேண்டும். பிஹார் மாநிலத்தைப்போல இருக்கக் கூடாது. திமுக அரசு மீது மக்களுக்கு மட்டும்அல்ல, எங்களுக்கும் அதிருப்தி இருக்கிறது. அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலங்களில் இருந்த செயல்பாடுகள்போல ஸ்டாலின் ஆட்சியில் இல்லை. அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரச்சினையில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின் திருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

